×

திருத்தணி முருகன் கோவிலில் தை கிருத்திகை விழா கொண்டாட்டம்: காவடிகளுடன் பக்தர்கள் குவிந்தனர்

திருத்தணி, ஜன. 21: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று தை கிருத்திகை விழா முன்னிட்டு காவடிகளுடன் பக்தர்கள் குவிந்ததால் பொது வழியில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் தைக்கிருத்திகை விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் பச்சைமாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, காலை, 9 மணியளவில் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று தைக்கிருத்திகை என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவில் தேர்வீதியில் குவிந்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதனால் நேற்று பொதுவழியில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

₹100 சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 2 மணி நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இரவு, 7 மணியளவில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையரும், செயல் அலுவலருமான ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தினர். மேலும் திருத்தணி போலிஸ் டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன் தலைமையில், 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post திருத்தணி முருகன் கோவிலில் தை கிருத்திகை விழா கொண்டாட்டம்: காவடிகளுடன் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Thai Krittikai festival ,Tiruthani Murugan Temple ,Tiruthani ,Thiruthani Murugan temple ,Thiruvallur District ,
× RELATED மனித முகம் போன்ற அரிய வகை ஆந்தை பிடிபட்டது